தண்ணீருக்கான நோபல் பரிசு என்று அறியப்படும் ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது இந்தியரான ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங், நமது நாட்டின் பாரம்பரிய மழை நீர் சேகரிப்பு முறைகளை கடைப்பிடித்து தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்ததை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகுக்கே வழிகாட்டி
‘நீர் வளத்தைக் காக்கவும் மேம்படுத்தவும் ராஜேந்திர சிங் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கிறது. மண்வளத்தை மேம்படுத்துகிறது. நதிகளை அழிவில் இருந்து காப்பாற்றுகிறது.
வன விலங்குகளும் வாழ வழி செய்கிறது. மேலும் தண்ணீர் வளத்தை பெருக்க அவர் மேற்கொள்ளும் வழிமுறைகள் மிகவும் எளிமையானது, சிக்கனமானது. உலகம் முழுவதுமே அவரது நீர் மேலாண்மை திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும். இயற்கையை நாம் சீரழிப்பதால் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் மோசமான இயற்கை சீற்றங் களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலகில் சுத்தமான குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது.
தண்ணீர் பிரச்சினையை அறிவியலாலும், தொழில் நுட்பத்தாலும் மட்டும் தீர்த்துவிட முடியாது. அரசு நிர்வாகத்தில் மனிதாபிமானத்துடனான அணுகு முறை, சிறந்த திட்டமிடல், சமூக ஒற்றுமை, சிறப்பான நீர் மேலாண்மை கொள்கை ஆகியவை வேண்டும்.
இந்த நிலையில் ராஜேந்திர சிங் நமக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்’ என்று விருதுத் தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 1991-ம் ஆண்டு முதல் ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது வழங்கப்பட்டு வருகிறது.
பணியின் தொடக்கம்
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திர சிங்குக்கு வயது 55. ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டப்படிப்பு முடித்த அவர், ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனம் பெற்றார். வறட்சியான அப்பகுதி மக்களின் முதல் தேவை குடிநீர் என்பதை உணர்ந்து கொண்ட ராஜேந்திர சிங் அதனை ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சியில் இறங்கினார்.
இந்தியாவின் பாரம்பரிய நீர் சேகரிப்பு முறைகளை நவீன முறையில் செயல்படுத்தி சுமார் ஆயிரம் கிராமங்கள் பயன்படும் வகையில் ஏராளமான தடுப்பணைகளையும், குளங்களையும் அமைத்தார். நீர் வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த பல ஆறுகள் இவரது தீவிர முயற்சியால் புத்துயிர் பெற்றன.
தொடரும் சேவை
தருண் பாரத் சங் என்ற அரசு சாரா அமைப்பை நிறுவிய ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நீர் வளத்தை மேம்படுத்தி வருகிறார்.
ராமன் மகசேசே விருது, ஜம்னலால் பஜாஜ் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என்று அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கை லட்சியம்
தனது பணி குறித்து ராஜேந்திர சிங் கூறியது: முதலில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியை தொடங்கினோம். இப்போது அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. இப்போது எங்கள் லட்சியம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது.
இப்போது இயற்கையை மாசுபடுத்துதல், சுரண்டுவது அதிகமாகிவிட்டது. இதனைத் தடுப்பதும், தண்ணீருக்காக ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து, அனைவருக்கும் நீர் வளம் கிடைக்கச் செய்வதும்தான் எனது வாழ்க்கை லட்சியம் என்றார்.
பிரிட்டனைச் சேர்ந்த நீர்வளத்துறை பொறியாளர் கேத்தரீன் பாய்காட், ராஜேந்திர சிங்கின் உதவியுடன் தங்கள் நாட்டில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ராஜேந்திர சிங்கின் பணிகள் குறித்து அவர் விருதுக் குழுவுக்கு தெரிவித்தார். இதன் அடிப்படையில் ராஜேந்திர சிங் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.