தண்ணீர் அமிழ்தம்

தண்ணீர் அமிழ்தம்

யாரும் செய்யலாம்:
தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.
தண்ணீரை நாம் எப்படி வீணாக்குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீல் பாட்டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
காய்கறி கழுவும்போது, பல்துலக்கும்போது, ஷேவிங் செய்யும்போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும். ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன்படுத்துங்கள். அதில் மிகக் குறைவாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும்போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.
வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப்புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சுங்கள்.
பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென்றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.
இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சசவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.
தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன்படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்.
வயிற்றுக்கு கொஞ்சம்
யாரும் செய்யலாம்: வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்.
பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் உள்ளூர் காய்கறி, பழங்களையே வாங்குங்கள். இது சத்தானது, உடலுக்கு உகந்தது, செலவு குறைந்தது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களை வாங்குங்கள். வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழங்கள் பயணம் செய்யும்போது அதிக மாசு வாயுக்களை வெளியிடுகின்றன.
சங்கிலித் தொடர் கடைகள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் விற்கப்படும் அயல்நாட்டுப் பழங்கள், காய்கறிகள் நெடுந்தொலைவு பயணம் செய்து நம்மை அடைகின்றன. நீண்டகாலம் சேமித்து வைக்க வசதியாக அவற்றின் மீது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அவற்றின் விலையும் அதிகம்.
யாரும் செய்யலாம்: தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். காகித பயன்பாட்டை குறையுங்கள். கடைகளுக்குச் செல்லும்போது துணி அல்லது சாக்குப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டலுக்கு உணவு வாங்கச் செல்லும்போது பாத்திரம் எடுத்துச் செல்லுங்கள்.
கம்ப்யூட்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கும்போது, இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள். குறிப்புகள் எழுத ஒரு பக்கம் அச்சிடப்பட்ட தாள்களை பயன்படுத்துங்கள். பரிசுப் பொருள்களை சுற்றிவரும் காகிதங்கள், கடித உறைகளை மறுபடி பயன்படுத்துங்கள்.
வெளியே செல்லும்போது, சுற்றுலா செல்லும்போது பையில் உங்களுக்கென ஒரு டம்ளரை எடுத்துச் செல்லுங்கள். மக்காத பிளாஸ்டிக் கோப்பைகள், காகித கோப்பைகள் விரயமாவதை இதன் மூலம் தடுக்கலாம்.
வீட்டில் மறுசுழற்சி செய்யத்தக்க, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை பிரியுங்கள். பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோக பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கி, வீட்டுத் தாவரங்களுக்கு இடலாம். சென்னையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி மற்றும் தெரு குடியிருப்போர் சங்கங்கள் இதை மேற்கொண்டு வருகின்றன.
மூன்று 'ஆர்'.
எந்தப் பொருளையும் குறைவாக பயன்படுத்த வேண்டும், மறுபடி பயன்படுத்த வேண்டும், மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். இவை 'மூன்று ஆர்' என்று அழைக்கப்படுகின்றன. தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கினால், மறுபடி பயன்படுத்தவோ, மறுசுழற்சி செய்யவோ தேவை இருக்காது. பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட 'பேக்' செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் விற்பனைக்குக் கிடைக்கும் அளவில் பெரிதாக வாங்குவதன் மூலம், குப்பைகளை குறைக்கலாம். செலவும் குறையும்.
உயிர் இயந்திரங்கள்:
மாசுபாடுகளை மறுசுழற்சி செய்யும் மரங்களை வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் 1000 கிலோ கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறது. கார்பன் டைஆக்சைடுதான் புவி வெப்பமடையக் காரணம். குறைந்த தண்ணீரே தேவைப்படும் உள்ளூர் மரங்களை வளர்க்கவும். மரங்கள் நிழலையும், தென்றல் காற்றையும் தரும். மரம் வளர்க்க முடியாதவர்கள், தொட்டிகளில் செடி வளர்க்கலாம். இது மனதிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
கருத்துகளை விதைத்தல்
சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும், அதில் தனிமனிதர்களின் பங்கு பற்றியும், விளைவுகளையும் மற்றவர்களிடம் கூறுங்கள். எந்த வகையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும் என்பதை விளக்குங்கள். பசுமை வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.

ஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போல, மனிதன் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறான் என்றொரு சூழலியல் அறிஞர் கூறினார். இனிமேலும் நாம் அப்படிப்பட்ட ஒரு புழுவாக இருக்கலாமா? புழுவாக இருக்கிறோமா, வண்ணத்துப்பூச்சியாக மாறி பசுமையை பரப்புகிறோமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது