ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…!
ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது…தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர்.‘‘பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், ‘இனிமேல் மரம் வெட்டல்லாம் போக வேண்டாம் வீட்டுல ஓய்வு எடுங்கனு!’ சொல்லிட்டான். நானும் ஒருவாரம் வீட்டுல சும்மா இருந்து பாத்தேன். என்னால இருக்க முடியலை, நேரமும் போகலை. வாராவாரம் என்னைப் பாக்க மகன் வந்திடுவான். ‘மரம் வெட்டித்தான என்னைப் படிக்க வச்சீங்க… எத்தனை மரம் வெட்டுனீங்களோ அத்தனை மரம் நடுங்க. மரம் வெட்டுறது பாவம், அந்தப் பாவத்தை பிழைப்புக்காக செஞ்சுட்டீங்க, இனிமேல் மரம் நடுங்கன்னு!’ பாடம் சொன்னான். கட்டிலில் படுத்திருந்த நான், எந்திரிச்சு உட்கார்ந்து மகன் சொன்னதை நினைச்சுப்பாத்தேன். ‘‘அட.. நிழல் கொடுத்திக்கிட்டுருந்த எத்தனை மரங்களைக் கட்டடம் கட்டுறதுக்கும், மரப்பலகை போடுறதுக்கும் வெட்டி சாய்ச்சு காசு வாங்கிருக்கோம், இனிமேல் மரத்தை நடுறது மட்டும்தான் நம்ம குறிக்கோள்’’னு முடிவெடுத்தேன். மறுநாளே மரம் வெட்ட பயன்படுத்துன கோடாரியை வித்துட்டு மண் வெட்டி, சட்டி, கடப்பாறை, பூவாளி, களைக்கொடத்தின்னு மரம் நட தேவையான சாமான்களை வாங்கியாந்தேன். அதோட அஞ்சு வேம்பு கன்னுகளையும் கையோட எங்க ஊருக்குள்ளயே நட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. ”இவ்வளவு காலமா…. ஒத்த மரம் கூட விடாம வெட்டிட்டு இப்போ என்ன புதுசா மரம் நடுற.. ’’ன்னு கிண்டலாப் பேசுனாங்க.. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காம மரக்கன்னுகள நட ஆரம்பிச்சேன், சிலர் வேணும்னே கன்னை பிடுங்கிப் போட்டுருவாங்க, நூறு கன்னு வச்சா… அதுல பத்து வளர்ந்து வந்தாக்கூட சந்தோசம்தான் எனக்கு. மகன் மாசம் ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்காக தருவான். அதுல முந்நூறு ரூபாயைத் துண்டா ஒதுக்கி பாண்டியன் கிராம பேங்குல போட்டு வச்சுடுவேன். தேவைப்படும் போது அதை எடுத்து மரக்கன்னுகளை வாங்குவேன். கோடை காலத்துல வாடகைக்கு வண்டி தண்ணி ஊத்துறதுக்கும் வச்சுக்குவேன். முதல்ல கன்று பதினைஞ்சு ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் விலைக்கு வாங்கித்தான் நட்டுட்டு வந்தேன். அப்புறம், வயக்காடு, காடுகரை, கம்மாய்னு போகும் போது கண்ணுல அரசு, வேம்பு..ன்னு ஏதாவது செடிகள் தென்பட்டா… அப்படியே வேரோடப் பிடுங்கி பாக்கெட்டுல மண்ணைப் போட்டு நிரப்பி வீட்டுக்கு கொண்டு வளர்த்து, நடுவேன். இதுக்காக எப்பவுமே பத்து பிளாஸ்டிக் பேப்பரை, டவுசர் பையில போட்டு வச்சிருப்பேன். யாரு கன்றுகள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்திடுவேன். ஆனா, நூறு கன்னு கேட்டா இருபத்தைந்து கன்னுகள்தான் கொடுப்பேன். கேட்டதை விடக் குறையா கன்னுகள் கொடுத்தாத்தான் இருக்குறத வச்சு ஒழுங்கா தன்ணீர் ஊத்திப் பராமரிப்பாங்க. அப்போதான் மரத்தோட அருமை தெரியும். பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் காலேஜ், முதியோர் இல்லம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை, அக்கம்பக்கத்து கிராமங்கள்னு இதுவரைக்கும்…ஆறாயிரம் மரக் கன்னுகளை நட்டுருக்கேன். இப்போ எனக்கு வயசு 76 ஆனாலும் என்னோட ஆயுசு வரைக்கும் மரம் நடுவேன். யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.. அது பாவம்.. நமக்கு நிழல் தருது, காற்றை சுத்தமாக்குது. மரத்தை பாத்தா மனசு இளகும். அதனால யாரும் மரத்தை வெட்டாதீங்க” என்று வேண்டுகோள் வைத்தார்